வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 21 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்) மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
ஏப்ரல் 22 மற்றும் 23 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மட்டுமல்லாமல், கடலோர டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 24 மற்றும் 25 மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

மழை ஒரு பக்கம் பெய்தாலும், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்குச் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது, ஆனால் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். இருப்பினும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மக்களுக்கு அதிகப்படியான வியர்வையும் அசௌகரியமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கும். மழைக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், அதிகப்படியான புழுக்கம் காரணமாக மக்கள் சிரமப்படலாம்.
நல்ல செய்தியாக, ஏப்ரல் 23 வரை தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று அல்லது புயல் எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மீனவர்கள் தாராளமாகக் கடலுக்குச் செல்லலாம்.