ஏற்கனவே 23 உயிர்களைப் பலிவாங்கிய கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்து, இன்னும் ஓயாத ரணமாய் நீடிக்கிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டாவது முறையாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க முயன்றபோது, அடியில் புதைந்திருந்த எஞ்சிய வெடிபொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உராய்வு காரணமாக மீண்டும் வெடித்துச் சிதறின. இந்தத் திடீர் வெடிப்பில் மீட்புப் பணியில் துணிச்சலாக ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மீண்டும் விபத்து ஏற்பட்டதால், மற்ற இடங்களிலும் வெடிக்காத மருந்துகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணி மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக நடைபெற்று வருகிறது. விபத்துக்குக் காரணமான ஆலை உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி, விபத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.