தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமிறகும் முதல்வர் சந்திரபாபு நாயுடு.. இரண்டு நாள் பயணத்திட்டம் என்ன?
TV9 Tamil News April 20, 2026 11:48 AM

ஏப்ரல் 20, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேசியக் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார். கோவை, சென்னை, மதுரை, சாத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

தேசிய தலைவர்களின் பிரச்சாரம்:

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், தேசியக் கட்சி தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கூட்டணிக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதேபோல், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தனர்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகம் வருகை:

இந்நிலையில், இன்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழகத்திற்கு வருகை தருகிறார். அமராவதியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைகிறார். கோவையில் பிற்பகல் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

கோவையைத் தொடர்ந்து, ஓசூர் மற்றும் தளி தொகுதிகளில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மாலை சென்னை வருகை தரும் அவர், ஆவடியில் நடைபெறும் பிரம்மாண்ட வாகன பேரணியில் பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21ஆம் தேதி (நாளை) சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை மற்றும் சாத்தூரில் சமூகத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார். பின்னர், அதே நாளில் மாலை அமராவதிக்கு திரும்புகிறார்.

மேலும் படிக்க: சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விஜய் பிரச்சாரம்.. முழு விவரம் உள்ளே..

ஆந்திரா முதல்வர் பேசப்போவது என்ன?

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தேசியக் கட்சி தலைவர்கள்; மறுபக்கம் மாநிலக் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் தொகுதி வாரியாக சென்று வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இரண்டு நாள் பயணத்தின் போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் சாதனைகள், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த 131வது சட்டத் திருத்த மசோதா குறித்து மக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வாகனப் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.