எங்களின் நியாயமான ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிட்டால் இனியும் நல்லவனாக இருக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் பதிலடி கொடுப்போம் என சூளூரைத்தது. அதேசமயம் தங்கள் நாட்டில் எரிபொருள் கொண்டு செல்லும் நீர்வழியின் முக்கிய பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
இதனால் ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த போரானது தற்காலிகமாக இரண்டு வாரம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையில் ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை திறந்து விட்ட நிலையில் திடீரென அதனை சொல்லாமல் கொள்ளாமல் மூடியது.
ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்தது.
இதனையடுத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இன்று மீண்டும் அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அதில், “ஈரான் நேற்று ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்தது. இது நமது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும். ஒரு பிரெஞ்சு கப்பலும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சரக்கு கப்பலும் குறிவைக்கப்பட்டது. அது நல்லதல்ல, இல்லையா?.
மூடப்பட்ட பாதையால் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழப்பது ஈரான் தான். இதில் அமெரிக்காவுக்கு எந்த இழப்பும் இல்லை. நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் ஏற்கத்தக்க ஒரு ஒப்பந்தத்தை வழங்குகிறோம், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அதை ஏற்கவில்லை என்றால் அமெரிக்கா ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் தகர்க்கும்.
இனிமேலும் நல்லவன் வேடம் கிடையாது. ஈரான் வேகமாகவும், எளிதாகவும் எங்களிடம் வீழ்வார்கள். கடந்த 47 ஆண்டுகளாக மற்ற அதிபர்களால் ஈரானுக்குச் செய்யப்பட்டிருக்க வேண்டியதை செய்ய வேண்டியது என் கடமையாகும். ஈரானைக் கொல்லும் இந்த இயந்திரம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.