ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மத்தியிலும், மைதானத்தில் கேட்சுகளை நழுவவிட்ட சோகத்தில் பஞ்சாப் வீரர் ஒருவர் முகம் மறைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, அதிரடியாக விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. கடினமான இந்த இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கடுமையாகப் போராடிய போதிலும் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் வீரர் சஷாங்க் சிங் போட்டியில் பீல்டிங்கின் போது செய்த தவறுகள் அவரை மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாக்கின. லக்னோ அணி பேட்டிங் செய்தபோது சஷாங்க் சிங் மொத்தம் மூன்று முக்கிய கேட்சுகளை நழுவவிட்டார். 13-ஆவது ஓவரில் பூரன் கொடுத்த கேட்சை தவறவிட்டார். 17-ஆவது ஓவரில் மார்க்ரம் கொடுத்த மிக எளிய கேட்சை எல்லைக்கோட்டு அருகே கோட்டைவிட்டு திகைத்து நின்றார். தொடர்ந்து 18-ஆவது ஓவரிலும் முகுல் சவுத்ரி கொடுத்த கேட்சை நழுவவிட்டார். அதிர்ஷ்டவசமாக பஞ்சாப் அணி அதிக ரன்களைக் குவித்திருந்ததால், இந்த கேட்ச் டிராப்புகள் போட்டியின் முடிவை பாதிக்கவில்லை.
போட்டி முடிந்ததும், தான் செய்த தவறுகளால் மிகுந்த வருத்தமடைந்த சஷாங்க் சிங், கேமராக்களில் தனது முகம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்தபடி மைதானத்தை விட்டு வெளியேற முயன்றார். இதைக் கவனித்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஷாங்கின் நிலையைப் புரிந்து கொண்டு தனது தொப்பியால் அவரது முகத்தை மறைத்து அழைத்துச் சென்றார். மேலும் பரபரப்பான ஆட்டத்திற்கு மத்தியில், வீரர்களுக்கு இடையே நிலவும் இந்தத் தோழமை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.