"மக்களுக்கு என்மீதிருக்கும் நம்பிக்கைதான் எனக்கான வெற்றி"- குன்னம் தொகுதியைத் தக்கவைக்கும் சிவசங்கர்
Vikatan April 20, 2026 04:48 PM

தமிழ்நாட்டில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. தி.மு.க-வின் வேட்பாளராக அங்கு களமாடிவரும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுடன் குன்னம் தொகுதியின் பிரசாரக் களத்தில் பயணித்தோம்.

பிரசாரத்தில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், கடந்த காலத்தில் தான் செய்த சேவைகள், எதிர்காலத்தில் தொகுதிக்குச் செய்யவிருக்கும் திட்டங்கள் குறித்தெல்லாம் மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.

பிரசாரத்தில் அவர் பேசும்போது, ``எங்கள் முதலமைச்சர் குறித்துப் பலர் என்னென்னவோ பேசினார்கள். அந்த எல்லாக் கணிப்புகளையும் உடைத்து, அவர் தலைவராக, முதல்வராக உயர்ந்தவர். மீண்டும் முதலமைச்சராக அவர்தான் வருவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது” என்றார்.

குன்னம் தொகுதிக்கு கடந்த ஐந்தாண்டுகளில் அவர் அமைச்சராக இருந்தபோது செய்த பணிகளை, தனது பிரசாரத்தில் பட்டியலிட்டார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

``புதிய சாலைகளை அமைத்திருக்கிறேன்; இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தியிருக்கிறோம். அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்து வசதி, குடிநீர்த் திட்டங்கள், தூய்மையான குடிநீர் வழங்குவது என்று செயல்பட்டிருக்கிறோம். அரசு கலைக் கல்லூரி, ஐடிஐ, மாதிரிப் பள்ளிகளைக் கொண்டுவந்திருக்கிறோம்.

துணை மின் நிலையங்கள் அமைத்திருக்கிறோம்’’ எனth தொகுதி முழுக்கச் செய்த பல திட்டங்கள் குறித்து மக்களிடம் விவரிக்கிறார். ``இதற்கு முன்பாக மாணவர்கள் 30-40 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்குச் செல்லவேண்டிய நிலை இருந்தது. அதை மாற்றி, உள்ளூரிலேயே கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம்” என்றார் சிவசங்கர்.

சிவசங்கர்

மேலும், ``இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செய்யத் துணியாத ஒன்றை திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செய்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அது, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம். இந்தத் திட்டம் பெண்களின் தற்சார்பை உயர்த்தியிருக்கிறது.

அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அடைய உதவியிருக்கிறது. முன்பு `இந்தத் திட்டம் சாத்தியமா?’ என்று கேள்வி எழுப்பியவர்களே இன்று அதைப் பின்பற்றுவதாகப் கூறுகிறார்கள்” என்று பெருமையுடன் சொல்கிறார் சிவசங்கர்.

அவர் தொடர்ந்து பிராசரங்களில் பேசும்போது, ``மற்ற மாநிலங்களைப்போல லாப நோக்கில் அல்ல, சேவை நோக்கில்தான் நாங்கள் மக்கள் போக்குவரத்தை நடத்துகிறோம். மக்களின் வசதியைக் கருத்தில்கொண்டே, வால்வோ பேருந்துகள் இப்போது தமிழகம் முழுவதும் வலம்வருகின்றன.

பெரம்பலூருக்கு அருகே புதிய ஷூ தொழிற்சாலை தொடங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. வேலை தேடி வெளிநாடு, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி செய்கிறோம்” என்றார்.

அதோடு, ``கல்விக்காக இந்தத் தொகுதிகளில் பல பணிகளை முன்னெடுத்திருக்கிறேன். அவை எனக்கு மனநிறைவைத் தருகின்றன. 10, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக, தேர்வுக் கையேடு மெட்டீரியல் கொடுக்கிறோம். அது பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆகியிருக்கிறது.

நான் பள்ளிக்குப் போகும்போது அந்தத் திட்டத்தை ஆசிரியர்களே பாராட்டுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள். ஒரு கிராமத்தில், பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம் வந்து `எங்க ஸ்கூல் நேரத்துக்கு நீங்க பஸ் விட்டீங்க... அதுக்கு ரொம்ப நன்றி’ என்று சொன்னார். அந்த நன்றி என்கிற வார்த்தையைத்தான் எனக்கான மனநிறைவாகப் பார்க்கிறேன்” என்று பேசும்போதே, அவரின் குரல் நெகிழ்கிறது.

தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் குறித்துப் பேசும்போது, ``ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு புதிய முகம் வரும். அது ஒரு மாற்று எனக் கூறப்படும். ஆனால், மக்கள் இறுதியில் நிலையான ஆட்சியையே தேர்வுசெய்கிறார்கள். சிலர் கூறும் `விஜய் அலை’ அது ஒரு தேர்தல் நேர பேசுபொருள் மட்டுமே. முடிவில்தான் மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பது தெரியவரும்” என்றார்.

குன்னம் பகுதி மக்கள் நம்மிடம் பேசும்போது, ``அமைச்சர் சிவசங்கரின் தொகுதி தன்னிறைவான தொகுதி. குறிப்பாக, எங்கள் தொகுதியில் புதிய சாலைகள், கழிவறை வசதிகள், சீரான குடிநீர் விநியோகம் செய்து கொடுத்திருக்கிறார். பேருந்து வசதிகள் அதிகமாகின. பெண்களுக்கு மாதாந்தர உதவித்தொகையால் பல பெண்களுக்குப் பொருளாதார உதவி கிடைத்திருக்கிறது’’ என்றார்கள். “முன்பு வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் வந்தது; இப்போது சீராகக் கிடைக்கிறது” என்கிறார்கள் சிலர்.

குன்னம், முன்பு ஒரு பின்தங்கிய பகுதியாக இருந்தது. இப்போது வளர்ச்சிப் பாதையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் இந்தத் தொகுதிக்குச் செய்ய வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கின்றன.

நான் கடந்த காலத்தில் இந்தத் தொகுதிக்குச் செய்த சேவைகள்தான் மக்களுக்கு என்மீதான நம்பிக்கையை அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன. என் தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

“குன்னம் தொகுதியின் வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும். அதற்கு மக்களின் ஆதரவு வேண்டும்’’ என்று அமைச்சர் தனது வேண்டுகோளை முன்வைக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.