"ஸ்டாலின் அரசுக்கு இன்னும் 5 நாட்களே கெடு!" மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் பரபரப்புப் பேச்சு...
எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை April 20, 2026 03:14 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரப் கூட்டத்தில் உரையாற்றினார். மயிலாடுதுறை பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமி மற்றும் சீர்காழி அதிமுக வேட்பாளர் சக்தி ஆகியோரை ஆதரித்து அவர் பேசியபோது, திமுக அரசின் மீதான தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகம் மாற்றம்

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

"தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் உள்ள பெற்றோர்களும், குறிப்பாகத் தாய்மார்களும் இந்த ஐந்து நாட்களில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். தமிழகத்தின் முதன்மைப் பிரச்சனையாக இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உருவெடுத்துள்ளன. நான் மேற்கொண்ட 100 நாள் நடைப்பயணத்தின்போது, தமிழகத்தில் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை என்ற வேதனையைத்தான் மக்கள் என்னிடம் அதிகம் பகிர்ந்துகொண்டனர்."

திமுக ஆட்சியின் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இதுவரை 44 ஆயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 2100 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 62 ஆயிரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கிருஷ்ணகிரி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் நடந்த சிறுமிகள் கொலைச் சம்பவங்களை நினைவூட்டி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை விமர்சித்தார்.

அதிமுக vs திமுக: சட்டம் ஒழுங்கு ஒப்பீடு

"அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குழந்தை கூட இதுபோலப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில்லை. ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு இத்தகைய கொடூரங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. எனக்கும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர், அதனால்தான் இந்த ஆதங்கத்துடன் பேசுகிறேன். இந்த மானங்கெட்ட ஆட்சியை மக்கள் உடனடியாக விரட்டியடிக்க வேண்டும்," என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மத்திய அரசின் சட்ட மசோதா: திமுகவின் துரோகம்

மத்திய அரசின் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தீயிட்டு எரித்ததை 'தேச துரோகம்' என்று வர்ணித்த அன்புமணி, இதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். "தமிழகத்தின் 40 எம்பிக்களும் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஸ்டாலின் அவர்களுக்கு அவரது தங்கை மட்டும் எம்பியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார். உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் எம்பி ஆகக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது," என்று குற்றம் சாட்டினார்.

விவசாயிகள் நலனும், ஊழல் புகாரும்

"டெல்டாகாரன்" என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்.

லஞ்சப் புகார்: நெல் கொள்முதலில் ஒரு மூட்டைக்கு 60 முதல் 70 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுவதாகவும், ஒரு குவிண்டாலுக்கு 275 ரூபாய் வரை ஊழல் நடப்பதாகவும் தெரிவித்தார்.

விலை நிர்ணயம்: பிரதமர் மோடி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2368 வழங்கும் நிலையில், திமுக அரசின் பங்களிப்பு வெறும் ரூ. 131 மட்டுமே. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் ரூ. 3500 வழங்கப்படும் என உறுதியளித்தார்.

தொழிற்சாலைகள்: மயிலாடுதுறை மாவட்டத்தில் மூடப்பட்ட நூலாலை மற்றும் சர்க்கரை ஆலைகளால் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மண்ணின் மைந்தருக்கே முன்னுரிமை

கடந்த தேர்தலில் சித்தமல்லி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்காமல் காங்கிரஸ் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்ததை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்ட அவர், தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்பி சுதா கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் என்றும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிப்பதால் இந்த மண்ணுக்கு மரியாதை கிடையாதா என்றும் கேள்வி எழுப்பினார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: எனது பங்களிப்பு

காவேரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்து, அதற்காகப் போராட்டங்களை நடத்தியது பாமக தான். அந்தத் தொடர் அழுத்தத்தின் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

கூட்டணி கட்சிகள் மீதான விமர்சனம்

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனுக்கு அந்த ஆட்சியில் துளியும் மரியாதை இல்லை என்று குறிப்பிட்ட அவர், பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் இணைந்திருப்பதை 'அயோக்கிய திமுகவை ஒழிக்கத் தொடங்கப்பட்ட கட்சிக்குச் செய்த துரோகம்' என்றார்.

"டாஸ்மாக் கடையில் மதுவைப் பாதுகாக்க ஐந்து பேர் இருக்கிறார்கள், ஆனால் பள்ளிகளில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். இதுதான் திமுகவின் சாதனை. இந்தத் தேர்தலில் டெல்டாவின் 37 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும், " என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.