‘நன்னிலத்தில் கவனம் பெற்ற நெல்லை முபாரக்’ வெற்றிக்கு அச்சாரமிட்ட கனிமொழி..!
அரூபி April 20, 2026 03:44 PM

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், டெல்டா மாவட்டத்தின் முக்கிய தொகுதியான நன்னிலத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அங்கே தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜை எதிர்த்து போட்டியிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அந்த எதிர்ப்பு மனநிலையில் உள்ள வாக்குகள், இசுலாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை குறி வைத்து நெல்லை முபாரக் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இசுலாமியர்கள், பட்டியலினத்தவரோடு சேர்த்து மற்ற சாதி, மதத்தினரும் நெல்லை முபாரக்கின் பிரச்சாரத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

உதவி செய்யும் எஸ்.டி.பி.ஐ – உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

இலவச அவசர ஊர்தி, அமரர் ஊர்தி, இரத்தக் கொடை என டெல்டா மாவட்டத்திலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின், அந்த அமைப்பின் உதவிகளால் அனைத்து சாதி, மத மக்களும் பயன்பெற்றுள்ளனர். தனியார் மருத்துவமனையினர் செல்ல தயங்கும் இடங்களுக்கு கூட எஸ்.டி.பி.ஐ அமைப்பின் நிர்வாகிகள், ஊழியர்கள் சென்று அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ உதவி, புயல், வெள்ள உள்ளிட்ட பேரிடர் சமய உதவிகளை செய்துள்ளதால், நெல்லை முபாரக்கிற்கு நன்னிலத்தில் மிகப்பெரிய ஆதரவு பெருகியுள்ளது.

ஆர்.காமராஜ் மீது அதிருப்தி?

தொடர்ந்து எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் இருந்த அதிமுகவின் ஆர்.காமராஜ் மீது சமீப காலமாக பெரும் அதிருப்தி அந்த தொகுதியில் நிலவுகிறது. குறிப்பாக, அதிமுகவினரே காமராஜின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளனர். முன்னர் மாதிரி களப்பணி ஆற்றாதது, மக்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு பழைய மாதிரி செல்லாதது, தேர்தல் நேரத்தில் மட்டும் மன்னார்குடியில் இருந்து நன்னிலத்திற்கு வருவது என்பன உள்ளிட்ட காரணங்களும், தொகுதிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை இன்னமும் சரி செய்யாமல் இருப்பதும் காமராஜ் மீது நன்னிலம் தொகுதி மக்கள் அதிருப்தி அடைய முக்கிய காரணமாக இருக்கிறது.

பின்னடைவாக இருக்கும் பாஜக

அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளதால் அது அதிமுகவினருக்கே பின்னடைவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நன்னிலம் தொகுதியில் பாஜகவினரின் செயல்பாடுகள் அதிமுகவினரை சூடேற்றியுள்ளன. அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளின் தொண்டர்களும் களத்தில் ஒருங்கிணைந்து செயல்படாதது நெல்லை முபாரக்கிற்கு சாதமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், உட்கட்சி பூசலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அதிமுக நிர்வாகிகளின் நீ பெரிய ஆளா? இல்லை நான் பெரிய ஆளா? என்ற மனப்பான்மையும் காமராஜூக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரம் செய்த கனிமொழி - உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் பிரச்சாரமும், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனின் ஆதரவும் நெல்லை முபாரக்கிறது நன்னிலம் தொகுதியில் பெரும் தெம்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நெல்லை முபாரக்கை ஆதரித்து கனிமொழி பேசுகையில், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்பவர்களுக்கு பாடம் புகட்ட இந்தத் தேர்தலை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் இவர்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த மண் கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டம் என்றும் பேசியது திமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக திட்டங்களை பட்டியலிட்டு கனிமொழி பேசியதும் நெல்லை முபாரக்கிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

அணுகுமுறையில் எளிமை – முபாரக்கிறகு பெரும் ஆதரவு

அதே நேரத்தில், நெல்லை முபாரக்கின் எளிமையான அணுகுமுறையும் அவரின் எதார்த்தமான, பக்குவமான செயல்பாடுகளும் நன்னிலம் தொகுதி மக்களை கவர்ந்துள்ளது. பிரச்சாரத்திற்கு பின்னர் நெல்லை முபாரக்கை நன்னிலம் முபாரக் என்றே மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளதால், அவருக்கு நன்னிலம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாக கூறுகின்றார்கள் உடன்பிறப்புகள்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.