2026 தேர்தல் களம்: நோட்டா வாக்குகளை தட்டிப்பறிக்குமா விஜய்யின் தவெக?
TV9 Tamil News April 21, 2026 05:48 PM

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 13 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் அதிகமாக இருந்தது அரசியல் கட்சிகளை அதிர வைத்தது. குறிப்பாக டி.நகர் தொகுதியில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட நிலையில், அங்கு 1,617 பேர் நோட்டாவிற்கு வாக்களித்திருந்தனர். இதேபோல் திருப்போரூர், தென்காசி, காட்பாடி உள்ளிட்ட தொகுதிகளிலும் நோட்டா வாக்குகள் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறின. இது, பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியையே வெளிச்சம் போட்டுக் காட்டியது.

2026-ல் நோட்டாவிற்கு மாற்றாக மாறுமா தவெக?

வழக்கமாக திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகச் சிந்திப்பவர்கள் நோட்டாவைத் தேர்வு செய்வார்கள். கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி இந்த இடத்தை நிரப்ப முயன்றாலும், தற்போது நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு புதிய மாற்றாகத் தென்படுகிறது. இதுவரை நோட்டாவிற்கு வாக்களித்த “அமைதிப் புரட்சியாளர்கள்” மற்றும் நடுநிலை வாக்காளர்கள், இம்முறை தங்கள் வாக்குகளை வீணாக்காமல் ஒரு வாய்ப்பாக தவெக-விற்குச் செலுத்தக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இது நோட்டாவின் சதவீதத்தைக் குறைப்பதோடு, தவெக-வின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் காரணியாகவும் அமையலாம்.

தவெக-வின் வருகையும் சிதறும் வாக்கு வங்கிகளும்

விஜய் தலைமையிலான தவெக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு துருவ அரசியலில் சலிப்படைந்தவர்களுக்கு தவெக ஒரு வடிகாலாகத் தெரிகிறது. நாம் தமிழர் கட்சி ஒரு தசாப்த காலமாகப் போராடி வரும் நிலையில், விஜயின் நட்சத்திர அந்தஸ்தும் தவெக-வின் புதிய சித்தாந்தமும் களத்தில் ஒரு “சைலண்ட் வேவ்” (Silent Wave) உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக – அதிமுக இடையிலான நேரடிப் போட்டி என்பது தற்போது தவெக-வையும் உள்ளடக்கிய மும்முனைப் போட்டியாகச் சுருங்கியுள்ளது.

Also Read: ரூ.100 கோடி சொத்துகளை மறைத்த விஜய்? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெற்றியைத் தீர்மானிக்கும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம்

2026 தேர்தலில் பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகவும் சொற்பமாகவே இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். வாக்குகள் பலமுனைப் போட்டிகளால் சிதறும்போது, சில நூறு வாக்குகளில் கூட வெற்றி கைநழுவ வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், நோட்டாவிற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அல்லது தவெக போன்ற மாற்று சக்திகள் பிரிக்கும் வாக்குகளும் பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கக்கூடும். 2016-ல் 5.63 லட்சமாக இருந்த நோட்டா வாக்குகள் 2021-ல் குறைந்தாலும், 2026-ல் அது தவெக-வின் வாக்கு சதவீதமாக மாறுமா அல்லது மீண்டும் அதிருப்தி வாக்குகளாக நோட்டாவிலேயே தங்குமா என்பது மே 4 தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.