தேர்தல் நாளில் கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன்
CineReporters Tamil April 23, 2026 09:48 PM

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படமான ஜெயம் பெற்ற வெற்றியால் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வந்தார். சமீபத்தில் தனது மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த பின், தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். இதற்கிடையே பாடகி கெனிஷா ஃப்ரான்ஸிஸ் என்பவருடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும், அவருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொள்வதும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று பல முன்னணி திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர். அத்துடன், பொதுமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தனர்.

ஆனால், நடிகர் ரவி மோகன் ஆந்திர மாநிலம் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வேகமாகப் பரவி வருகின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.