தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வாக்கு சதவீதம் 65-ஐ கடந்து சீராக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, நாமக்கல் (76.43%), கரூர் (76.08%), சேலம் (75.79%), மற்றும் ஈரோடு (75.61%) ஆகிய மாவட்டங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவுடன் முன்னிலையில் உள்ளன.
தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் முறையே 74.68% மற்றும் 75.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் சென்னையில் 68.13% வாக்குகளும், கோயம்புத்தூரில் 71.16% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை தூத்துக்குடி (65.18%), ராமநாதபுரம் (63.14%), மற்றும் கன்னியாகுமரி (61.95%) ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு மற்ற இடங்களை விட சற்று நிதானமாக உள்ளது.
இளைஞர்கள் மற்றும் பெண்களின் வரத்து வாக்குச்சாவடிகளில் அதிகமாக காணப்படுவதால், மாலை 6 மணிக்குள் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 80-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதால், இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva