தமிழ்நாடு முழுவதும் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வரிசையில் இருப்பவர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தமாக 82.24 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் புதிய அளவில் வாக்கு எண்ணிக்கை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களில் கரூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 89. 32 சதவீதம் வாக்குகள் பதிவானது. அடுத்த இடத்தில் 88.2% வாக்குகளுடன் சேலமும், 87.6 சதவீதத்துடன் நாமக்கல் மூன்றாவது இடத்திலும், 87.59 சதவீதத்துடன் ஈரோடு நான்காவது இடத்திலும், 87.28 சதவீதத்துடன் தர்மபுரி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.