துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
234 தொகுதிகளுக்குமான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. மாலை 06 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதுவரை நான்கு கோடிக்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 06 மணிக்கு முன்பாக வாக்கு மையத்திற்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளரும் திமுக அமைச்சருமான சேகர்பாபு அவர் தொகுதியில் உள்ள ஒரு பூத்திற்கு சென்றார். அதேபோல், அத்தொகுதியின் தவெக வேட்பாளரான சினோரா அசோக்கும் அந்த பூத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, திமுகவினர் அதிகப்படியாக வாக்கு மையத்தின் வெளியே நின்றுள்ளனர். அதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த தவெக வேட்பாளர் சினோரா அசோக் தெரிவித்துள்ளார். பின்னர் தவெகவினரும் அதிகப்படியாக அந்த இடத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக திமுக வேட்பாளர் சேகர்பாபுவுக்கும், தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்ட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.