கத்தி படத்தை எதிர்த்தபோது விஜய் தரப்பில் இருந்து தன்னிடம் இருந்து பேரம் பேசப்பட்டதாக தவாக தலைவர் வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், 18 ஆவது எடிசன் விருது வழங்கும் விழா தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தவாக தலைவர் வேல்முருகன், நடிகர் ராதாரவி, இயக்குனர் விக்ரமன், நடிகை அம்பிகா, பாடகர் அந்தோணி தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வரும் மே 24ஆம் தேதி எடிசன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய தவாக தலைவர் வேல்முருகன், “உலக தமிழ் மக்களின் உரிமைக்காக வாழ்வுரிமை கட்சியை நடத்தி வருகிறேன். அனைத்து தமிழ் மக்களுக்கான கட்சி இது. நாங்கள் blood test லாம் செய்வது இல்லை. வேறு மொழியை சேர்ந்தவர்களை தமிழகத்தில் இருந்து செல்லுங்கள் என்று சொல்லும் தலைவர் நான் இல்லை. பொதுவாழ்க்கையில், ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்கியது இல்லை. லஞ்சம், கையூட்டு பெறாத ஒரு அரசியல் தலைவன் நான் என்றும், பெப்சி, கோக் நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், பெரும் தொகையை கொடுப்பதாக பேரம் பேசப்பட்டது. கத்தி படத்தை எதிர்த்தபோது விஜய் தரப்பில் இருந்து என்னிடம் பேரம் பேசப்பட்டது. விஜயின் மேலாளர் எனக்கு காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் என்னை சந்தித்து ஒரு பெரும் தொகை கொடுப்பதாக கூறினர். மேலும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாகனங்கள் வாங்கி தருவதாக அவர்கள் கூறினர்” என தெரிவித்தார்.