கரூரில் சோகம்: காருக்குள் விளையாடியபோது கதவு பூட்டிக்கொண்டதால் 4 வயதுச் சிறுவன் மூச்சுத்திணறி பலி!
Seithipunal Tamil May 01, 2026 09:48 PM

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் உள்ளே சிக்கிய 4 வயதுச் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழுகூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான வேலு - மாரீஸ்வரி தம்பதியரின் மகன் சஞ்சீவி (4) சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே கார் கவரால் (உறை) மூடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறி அந்தச் சிறுவன் விளையாடியதாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக காரின் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், சிறுவனால் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். இறுதியில் சந்தேகத்தின் பேரில் காரின் உறையை அகற்றிப் பார்த்தபோது, சஞ்சீவி காருக்குள் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகச் சிறுவனை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாகச் செய்த ஒரு செயல் பிஞ்சுயிரைப் பறித்த இந்தச் சம்பவம் கழுகூர் கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.