தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பதிவில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

அலுவலகத்தை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சுற்றியிருந்த கட்சி பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், “தேர்தல் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் வெளிப்பாடாகவே இத்தகைய வன்முறைச் செயல்கள் நிகழ்கின்றன என்பது பொதுமக்களுக்கு தெளிவாகப் புரிகிறது.
மக்கள் ஆதரவை இழந்த சில ஆதிக்க மனப்பான்மையுடையவர்கள், நமது கழகத்திற்கு கிடைத்து வரும் பெரும் ஆதரவை சகித்துக்கொள்ள முடியாமல், குண்டர்களை தூண்டி இத்தகைய அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், “இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் பேரில் காவலர்கள் கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக பேணும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சிப்பவர்களுக்கு எதிராக முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்படுகிறது.