நீலகிரி, கோவை உள்ளிட்ட 08 மாவட்டங்களில் வரும் 03 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Seithipunal Tamil May 02, 2026 01:48 AM

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 08 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

''தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக சுமார் 1.5 கி.மீ உயரம் வரை, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (மே.02) ஒரு சில இடங்களிலும், நாளை மறுநாள் (மே.3) ஓரிரு இடங்களிலும், மே 04-ஆம் தேதி ஒருசில இடங்களிலும், மே.05 முதல் மே.07-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (மே.02) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (மே.03-ஆம் தேதி) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர் மாவட்ட மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும்,

மே.04-ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மே.02) முதல் மே.05-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 05 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (மே.02) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்ப நிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 08.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 07 செ.மீ மழை, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 05 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, அம்பா சமுத்திரம், நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 04 செ.மீ மழை பதிவாகியுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.