சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, 'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இந்தச் சேவை வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ள 22,79,743 மாணவர்களில் 13,32,928 பெண் விண்ணப்பதாரர்களும், 9,46,815 ஆண் விண்ணப்பதாரர்களும் இடம்பெற்றுள்ளனர். விண்ணப்பதாரர்களில் 58% பேர் பெண்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறுகிறது. 180 வினாக்கள் கேட்கப்பட்டு, 720 மதிப்பெண்கள் கொள்குறி வகையிலான தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு தலைநகர் சென்னை மாவட்டத்தில் 43 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 22,195 மாணவர்கள் தேர்வை எழுதவுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான அட்மிட் கார்டு ஏப்ரல் 26-ம் தேதி வெளியானது. மாணவர்கள் அட்மிட் கார்டு, அடையாள அட்டை, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு அல்லது தகவல்களுக்கு 011-40759000/011-69227700 என்ற எண்கள் அல்லது neetug2026@nta.ac.in இமெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.