ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை சீண்டிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு ஐபிஎல் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் இன்னிங்ஸின் 2-வது ஓவரை ஜேமிசன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்சி பவுண்டரி விளாசினார். அடுத்த பந்திலேயே ஜேமிசன் அவரை கிளீன் போல்டாக்கினார்.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில், ஜேமிசன் சிறுவனான வைபவ்வை நோக்கி ஆக்ரோஷமாகச் சைகை செய்து, அவரை வம்புக்கு இழுக்கும் வகையில் வழி அனுப்பி வைத்தார். ஒரு சர்வதேச வீரர், வளர்ந்து வரும் இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐபிஎல் நிர்வாகம், ஜேமிசன் ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.5-ன் கீழ் (லெவல் 1) தவறு செய்ததை உறுதி செய்தது. எதிரணி வீரரைத் தூண்டும் வகையில் செயல்பட்டதற்காக அவருக்கு அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், ஒரு டிமெரிட் (Demerit) புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. மேட்ச் ரெப்ரி ராஜீவ் சேத் விதித்த இந்தத் தண்டனையை ஜேமிசன் ஏற்றுக்கொண்டார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர்களில் கடினமான இலக்கை நிர்ணயித்தது. ரியான் பராக் அதிரடியாக விளையாடி 90 ரன்கள் குவித்தார். 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி, 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. டெல்லி தரப்பில் கே.எல்.ராகுல் 75 ரன்களும், பதும் நிசங்கா 62 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். மேலும் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்திருந்த டெல்லி அணிக்கு, இது மீண்டெழுவதற்கான 4-வது வெற்றியாக அமைந்தது.