தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுஜி தேவராஜ். இவரது மகன் ஞானசேகர் ( 30 வயது). இவர், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மொளச்சூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், வாடகை வீட்டில் 4- ஆவது மாடியில் வசித்து வந்த ஞானசேகர் சம்பவத்தன்று செல்போனில் பேசியவாறு மாடிப்படி ஏறியதாக கூறப்படுகிறது. இவ்வாறு செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடிக்கு சென்ற ஞானசேகர் அங்கும் செல்போனில் பேசிக்கொண்டே நடந்துள்ளார். அப்போது, மொட்டை மாடியில் விளிம்பின் அருகே நின்று கொண்டு ஞானசேகர் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதில், எதிர்பாராத விதமாக ஞானசேகர் கால் இடறி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலிஇதில், ஞானசேகருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞானசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்
தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த எலும்பு முறிவுமொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஞானசேகருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது, மேலும், தலையில் இருந்து அதிக அளவிலான ரத்தம் வெளியேறியது அவரது உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, ஞானசேகரின் பெற்றோர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணைஅந்த புகாரின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஞானசேகர் செல்போன் பேசியபடி எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஞானசேகர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் சக அறையின் நபர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி; இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு”.. செல்வப்பெருந்தகை காட்டம்!