TVK:`ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு வாய்ப்பு கொடுத்த தலைவர் விஜய்க்கே இந்த வெற்றி' - நெகிழும் சத்யா
Vikatan May 04, 2026 11:48 PM

'234 தொகுதிகளிலும் உங்கள் விஜய் தான் வேட்பாளராக போட்டியிடுகிறேன்' என்றார். இந்த ஒரு  வார்த்தை மந்திரம் தான் ஒரு விரல் புரட்சியில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது" என்றார் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி தவெக வேட்பாளர் சத்யா.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சத்யா 61,161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் திவ்யா 59,851 வாக்குகளும், திமுக வேட்பாளர் சி கே ராஜா 55,709 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளரை விட 1,310 வாக்கு வித்தியாசத்தில்  தவெக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி முகத்தோடு வெற்றிச் சான்றிதழ் பெற காத்திருந்த சத்யா நம்மிடையே பேசுகையில்,

"தலைவர் விஜய் என்ற தனி மனிதரின் முகத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த தலைவருக்கே இந்த வெற்றி சேரும்.

தொகுதி மக்கள் பலருக்கு என்னை யார் என்றே தெரியாது. அப்படி இருந்தும் எனக்கு வாக்கு அளித்து மக்கள் வெற்றி பெற வைத்தார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் தலைவர் விஜய் தான். அவரது வெற்றி முகம் தான் எனக்கு வாக்காக மாறியது.

தலைவர் விஜய் மக்கள் மத்தியில் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான் இந்த மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு காரணம்.

'234 தொகுதிகளில் நான் தான் உங்கள் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறேன்' என்றார் இந்த ஒரு  வார்த்தை மந்திரம் தான் ஒரு விரல் புரட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

விஜய் மீது உள்ள அளவற்ற நம்பிக்கையில் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றியை தேடித் தந்துள்ளனர்.

ஆளும் கட்சியின் மீது இருந்த வெறுப்பு தான் ஆட்சி மாற்றத்தை கொடுத்துள்ளது.

மக்களின் அடிப்படை வசதிக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். எனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கும் எனக்கு பின்னால் இருந்து தேர்தல் பணி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

TVK: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய் - `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவ’னின் அரசியல் பயணம்!
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.