பதிலடி கொடுக்குமா ஐதராபாத்? பஞ்சாப் அணியுடன் இன்று அதிரடி பலப்பரீட்சை!
Dinamaalai May 06, 2026 03:48 PM

 

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஐதராபாத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 6 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய இன்றைய போட்டியில் வெற்றி பெறத் துடிக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி மற்றும் ஒரு முடிவில்லை என்ற கணக்கில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அந்த அணி கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பப் போராடும். அந்த அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் போன்ற அதிரடி வீரர்கள் நல்ல நிலையில் இருப்பது அணிக்குப் பலமாக உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் அதில் 17 முறை ஐதராபாத் அணியும் 8 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் ஏற்கனவே நடந்த மோதலில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய தோல்விக்குத் தனது சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து ஐதராபாத் அணி ரசிகர்களைக் குஷிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.