இந்த ஆண்டும் தமிழ் திரைப்பட உலகில் பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், குறைந்த செலவில் தயாராகும் சிறிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது கவனிக்கத்தக்க மாற்றமாக உள்ளது.
இந்த ஆண்டு வெளியான பராசக்தி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, கர போன்ற பெரிய நட்சத்திர படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக படுதோல்விகளையே சந்தித்தன.
இதற்கு மாறாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான தாய்கிழவி, யூத் மற்றும் வித் லவ் போன்ற படங்கள் கதைக்கான முக்கியத்துவம், இயல்பான நடிப்பு மற்றும் புதுமையான காட்சிப்படுத்தல் ஆகிய காரணங்களால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றன.
பெரிய படங்களில் அதிக செலவு, பிரமாண்ட காட்சிகள் இருந்தாலும் ரசிகர்களை கவரும் புதுமை குறைந்தால் அது ரசிகர்களை ஈர்க்க முடியாமல் திணறுவதாக விமர்சிக்கின்றனர். ஆனால் சிறிய படங்கள் உணர்ச்சிகரமான கதைகளையும் நெருக்கமான அனுபவங்களையும் வழங்குவதால் அதிகம் தொடர்பு கொள்ளப்படுகின்றன என்கிறார்கள்.
மேலும், OTT தளங்களின் வளர்ச்சி, சமூக வலைதள விமர்சனங்கள், ஆகியவை சிறிய படங்களுக்கு பெரிய ஆதரவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திர பலம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்காது என்பதைக் காட்டும் வகையில், சிறிய படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர’ திரைப்படம் கவுந்தடித்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படம் வரும் மே 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படமாவது தேறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை கருப்பு படத்தின் டிரைலர் வெளியாகாத நிலையில், விடிஞ்சா கல்யாணம் புடி வெத்தல பாக்குன்னு ஆர்.ஜே. பாலாஜி கடைசி நேரத்தில் தான் கருப்பு டிரைலர் வெளியிடுவாரா என கலாய்க்கின்றனர்.