உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணி.. ராகுல் சம்மதத்துடன் வெளியான காங்கிரஸ்அறிக்கை..!
Webdunia Tamil May 06, 2026 06:48 PM

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. இத்தேர்தலில் தி.மு.க தோல்வியை தழுவிய நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 11 இடங்கள் தேவைப்பட்டதால், த.வெ.க காங்கிரஸின் ஆதரவை நாடியது.

இந்நிலையில், த.வெ.க ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் கூடிய அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு அரசியலை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புவாத சக்திகளைத் தூர விலக்கி வைப்பது என்ற முக்கிய நிபந்தனையுடன், தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கரின் லட்சியங்களைப் பின்பற்றி காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர இக்கூட்டணி பாடுபடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆதரவு வெறும் ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மற்றும் விஜய் ஆகியோரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி, தமிழக இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் எனத் தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.