மேற்கு வங்காள அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரா மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். வட 24 பர்கானா மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி களம் இறங்கியிருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்காகக் களத்தில் நின்று தீவிரமாகப் பணியாற்றியவர்களில் சந்திரா மிக முக்கியமானவர். மம்தாவையே வீழ்த்தி சுவேந்து அதிகாரி வெற்றி பெறுவதற்குப் பக்கபலமாக இருந்தவர் என்பதால், தற்போது நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறைகள் ஏற்கனவே மாநிலத்தில் நீடித்து வரும் சூழலில், ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் உதவியாளர் கொல்லப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மேலிடம் இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.