திரைப்பட தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி ராஜஸ்தான் சென்றிருந்தபோது அங்கு நடந்த விபத்தில் அகால மரணமடைந்த நிலையில் அவரது உடல் சென்னைக்குத் தற்போது கொண்டு வரப் பட்டுள்ளது. இன்று உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
திரைத்துறையினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் முரளி லைலா நடித்த ‘காமராசு’ படத்தை இயக்கிய இயக்குனர் நாஞ்சில் பி சி அன்பழகனிடம் பேசினோம்.
நாஞ்சில் அன்பழகன்
‘’எஸ்.ஏ. சந்திரசேகர் சார்கிட்ட உதவி இயக்குனரா சினிமாவுக்குள்ள வந்தேன். விஜய் நடிச்ச ரசிகன், தேவா ரெண்டு படத்துலயும் ஒர்க் பண்ணினேன். பிறகு படம் பண்ண முயற்சி செய்தப்ப புரடியூசர் கிடைக்கலை.
திருவல்லிக்கெணியில தங்கியிருந்தேன். சில இடங்களுக்கு கதை சொல்ல ட்ரை பண்ணி பலன் கிடைக்கலை. விரக்தியில இருந்தேன். சொந்த ஊரான நாகர்கோவில்ல அப்பா திமுகவுல பொறுப்புல இருந்தார். ‘பேசாம ஊருக்கு வந்திடு, அரசியல்ல ஈடுபடு’னு சொன்னார்.
RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்கிளம்பலாம்கிற முடிவுக்கு வந்து அடுத்த ரெண்டு நாள்ல சென்னையை விட்டு புறப்படத் தயாரா இருந்த நிலையில காலையில மெரினா பீச் பக்கம் போனேன். கடலை ரசிச்சபடியே நடந்து போயிட்டிருந்தப்ப எதிரே தனியாளா வாக்கிங் போயிட்டிருந்தார் சௌத்ரி சார்.
அவரை எனக்குத் தெரியும், என்னை அவருக்குத் தெரியாது. அதனால போய் பேசத் தயங்க. கொஞ்ச தூரம் அவர் பின்னாடியே நடந்து போனேன். அப்ப சிவாஜி சிலை பீச்ல இருந்தது. அந்தச் சிலை முன்னாடி உக்கார்ந்து கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திட்டிருந்தார். நானும் கொஞ்சம் தள்ளி நின்னு தயங்கியபடியே அவரையே பார்த்திட்டிருந்தேன்.
நடிகை லைலா
ஒரு தயாரிப்பாளரைத் தனியா இப்படிக் கூட பார்க்க முடியுதேங்கிறதே எனக்கு ஆச்சரியமா இருந்தது. ஆனா கடைசிவரை கிட்ட போய் பேசவே இல்லை. ஆனா அந்த நிமிடம் ஒரு ஐடியா உதிச்சது. இவர்கிட்ட கதை சொல்ல வாயுப்பு கேட்டா என்னனு.
அப்ப பேஜர் காலம். சினிமா வட்டாரத்துல அவருடைய எண்ணை வாங்கி, ''இன்னும் நான் அழுதால் சென்னை மூழ்கிடும்''னு ஒரு மெசேஜ் போட்டேன்.
RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்எதிர்பார்க்கவே இல்லை உடனே வரச் சொல்லி பதில் வந்தது. அதே மெரினா போய் என்னை அறிமுகப்படுத்திகிட்டு பீச்ல பார்த்தது வரை சொல்லி, ‘காமராசு’ படத்தின் கதையைச் சொன்னேன். உடலுறுப்பு தானம் தொடர்பான அந்தக் கதை அவருக்கு உடனே பிடிச்சுப் போச்சு..
‘உங்க குருநாதர்கிட்டயே சொல்லி விஜய்யை கமிட் செய்யுங்க, படத்தைப் பண்ணலாம்’னு சொன்னார்.
காமராசு படம்
ஆனா எனக்கு எஸ்.ஏ.சி சார் கிட்ட போக தயக்கம். அவர்கிட்ட இருந்து வந்துட்ட சூழலில் ஓ.கே சொல்வாரான்னு தோணுச்சு. அதனால நான் ஏற்கனவே மனசுல நினைச்சு வச்சிருந்த முரளி கிட்டப் போய் சொன்னேன். அவருக்கும் கதை பிடிச்சுப் போக, உடனே மனைவியைக் கூப்பிட்டு எங்கிட்ட ஐம்பதாயிரம் ரூபாய் தரச் சொன்னார்.
தயாரிப்பாளர்தானே சம்பளம் தரணும்னு சொன்னதும், இது நான் விருப்பப் பட்டு தர்றதுனு கட்டாயப்படுத்தி வாங்கிக்கச் சொன்னார்.
பிறகு சௌத்ரி சார்கிட்ட வந்து கதைக்குக் கொஞ்சம் மெச்சூர்டான முகம் வேணும்கிறதால முரளிகிட்டப் பேசினேனு தயங்கியபடியே சொன்னேன். அதனால ஒண்னுமில்ல, பண்ணலாம்னு சொல்லி, ஹீரோயினுக்காவது இந்தப் பொண்ணு சரியா இருக்கான்னு பாருங்கனு லைலா போட்டோவைக் கொடுத்தார். ஹீரோ விஷயத்துல நானே முடிவு செய்துட்டதால அந்த இடத்துலயே லைலாவை ஓகே சொல்லி பேசி கமிட் செய்தோம்.
கதை பிடிச்சிருந்தா யார் என்ன தெரியாத இயக்குநர்களுக்கும் வாய்ப்பு தர்றதோட அவங்களுக்கு முழுச் சுதந்திரமும் தந்து படத்தைத் தயாரிப்பார். எனக்கு அந்த ஒரு படம் மூலம்தான் அறிமுகமானார்.
அதன் பிறகு நான் அரசியலுக்கு வந்து இன்னைக்கு சென்னையிலேயே செட்டில் ஆகிட்டாலும் அன்னைக்கு அவரைச் சந்திச்சது மட்டுமே என் வாழ்க்கையின் திருப்பு முனைனு சொல்வேன்'’ என நெகிழ்கிறார் இவர்.
ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!