தமிழகத்தில் புதிய ஆட்சி அமையாத நிலை.. டிஜிபிக்கு பறந்த உத்தரவு.. மத்திய உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை!
TV9 Tamil News May 07, 2026 12:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. தவெகவுக்கு கிடைத்த 108 தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவளித்த 5 தொகுதிகள் என 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம், விஜய் வழங்கினார். ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 பெரும்பான்மை இடங்கள் இல்லாத காரணத்தால் ஆளுநர் தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. அத்துடன், விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இதனால், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

தமிழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

இந்த நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால், தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை டி. ஜி. பி. சந்தீப் ராய்ரத்தோருக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது. அதில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்காத சூழ்நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழ வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்து வருவதால், திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க: அதிருப்தியில் ஆளுநர்? விஜய் பதவியேற்பதில் சிக்கல்? வெளியான பரபரப்பு தகவல்

திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி

இது தொடர்பாகவே, இரு கட்சிகளும் தனித்தனியே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி அமைப்பதற்கு அச்சாரமாக நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு தற்போது வரை திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்காத நிலை இருந்து வருகிறது. அத்துடன் இந்த தகவல் உண்மை என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பதில் நீடிக்கும் இழுபறி

இதனால், தமிழக வெற்றிக் கழகத்துக்கு தற்போது வரை 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்காத நிலை நீடித்து வருவதால் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருவதுடன், அவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே அரசியல் கட்சியினர் இடையே மோதல் போக்கு நிலவி சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை – கூட்டணி ஆட்சியா? பரபரப்பு தகவல்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.