ஸ்டாலின் தோல்வி எதிரொலி.. மனமுடைந்த திமுக தொண்டர் தற்கொலை; நிர்வாகி மாரடைப்பால் மரணம்!
TV9 Tamil News May 07, 2026 01:48 PM

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி. புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், திமுகவில் தொண்டராக இருந்து வந்த நிலையில், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் உதவியாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கடந்த மே 4- ஆம் தேதி ( திங்கள் கிழமை) தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதை தனது வீட்டில் இருந்து டிவி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்ததை பார்த்து மிகவும் மன வருத்தம் அடைந்தார். அத்துடன், மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததை எண்ணியும் மிகவும் மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. அன்று முதல் ஆறுமுகம் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வி

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததையும், கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததையும் ஏற்றுக் கொள்ள முடியாத கட்சியின் தொண்டர் ஆறுமுகம் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். அந்த நிலையில், வெளியே சென்றிருந்த அவரது குடும்பத்தினர் வீடு திரும்பிய போது ஆறுமுகம் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க: ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் – பதவி ஏற்பு எப்போது?

தற்கொலை செய்து கொண்ட திமுக தொண்டர்

பின்னர், ஆறுமுகத்தை மீட்ட அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், திமுக தொண்டர் ஆறுமுகம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

நெஞ்சு வலியால் திமுக அவைத்தலைவர் பலி

இந்தச் சம்பவம் குறித்து ஆறுமுகம் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, சேலம், சாமிநாத புரத்தை சேர்ந்தவர் சில்வஸ்டார். மாநகராட்சியின் 26- ஆவது வார்டு திமுக அவைத் தலைவராக இருந்த இவர், மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் மயங்கி விழுந்தார். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேலும் படிக்க : தவெகவுக்கு ஆதரவு இல்லை, காரணம் இதுதான் – அதிமுகவின் கே.பி.முனுசாமி பரபரப்பு கருத்து

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.