தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
நேற்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை (அர்லேகர்) சந்தித்த விஜய், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவுப் பட்டியலை வழங்கினார். இந்தப் பட்டியலைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதைச் சுட்டிக்காட்டினார். போதிய பலம் இல்லாத காரணத்தால், ஆட்சி அமைக்க உடனடியாக அனுமதி வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
ஆளுநரின் இந்த முடிவால், இன்று திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழா தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான கூடுதல் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் த.வெ.க இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள விஜய், இன்று காலை 11 மணிக்கு ஆளுநரை மீண்டும் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார்.
அதாவது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என நடிகர் விஜய் கோரிக்கை விடுக்க இருக்கிறார். அவர் சட்டசபையில் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று ஆளுநருக்கு உறுதி கொடுக்க இருக்கும் நிலையில் ஒருவேளை ஆளுநர் இதனை ஏற்கவில்லை அடுத்ததாக சுப்ரீம் கோர்ட் உதவியை தமிழக வெற்றிக்கழகம் நாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.