பி.எம். ஸ்ரீ' பள்ளி திட்டத்தை அமல்படுத்துங்கள்: தமிழகம், மே.வங்கம் தலைமை செயலாளர்களுக்கு கடிதம்..!
Webdunia Tamil May 07, 2026 03:48 PM

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் 'பி.எம். ஸ்ரீ' பள்ளித் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

தேசிய கல்வி கொள்கையின் கீழ் நாடு முழுவதும் 14,500 அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, தமிழகத்தில் இருந்த திமுக அரசு மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஆகியவை இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இத்திட்டம் அங்கு செயல்படுத்தப்படாமல் இருந்தது.

தற்போது இரு மாநிலங்களிலும் அரசியல் சூழல் மாறியுள்ளதால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தி இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு விரைவில் கடிதம் எழுதவுள்ளது.

இத்திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிதி ஒதுக்கீட்டைப் பெற வேண்டுமெனில் இந்த ஒப்பந்தம் அவசியம் என்பதால், புதிய அரசுகள் இதற்குச் சம்மதிக்கும் என மத்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மாநில உரிமைகளைப் பறிக்க கல்வி நிதியை மத்திய அரசு ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.