தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழக வெற்றி கழகத்தை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும். அதுவே அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற வழிகாட்டுதல்கள் ஆகும். விஜய் ஆட்சி அமைப்பதற்கு கடிதம் அளித்துள்ள நிலையில் ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு எந்தெந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தருகின்றனர் என்பது குறித்த தகவலை ஆளுநர் கேட்க முடியாது. இதில், 118 எம்எல்ஏக்கள் ஆதரவை நிரூபித்து விட்டு பதவி ஏற்கலாம் என்று ஆளுநர் கூற முடியாது.
தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்தமிழகத்தில் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருப்பதை கூறும் நிலையில், அந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். அந்த கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை சட்டமன்றத்தில் மட்டுமே நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்படுத்துவது பாஜக திரை மறைவில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.
மக்கள் தீர்ப்பின்படி விஜய் பதவி ஏற்பதே சரியாகும்மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பது தான் சரி ஆகும். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பம் முதல் பாரதிய ஜனதா கட்சி கையாண்டு வருகிறது. தற்போதும், தமிழக வெற்றிக் கழகத்தை கையாளுவதற்கு பாஜக துடித்து வருகிறது. அந்த கட்சியையும், கட்சியின் தலைவர் விஜயையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக திட்டமிட்டு வருகிறது. இது என்னுடைய கருத்தாகும்.
தவெகவை கையாளும் முயற்சியில் பாஜகஇந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் கும்பல் ஆகியவை தமிழக வெற்றி கழகத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட இடதுசாரி கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக விஜய் கூறியதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இதில், உள்ள அரசியல் எதிர்காலம் உள்ளிட்டவற்றை நாங்கள் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளோம். இது தொடர்பான முடிவை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்க முடியாது. எங்கள் கட்சியில் உள்ள முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்கள் எடுத்த கருத்தியலின் அடிப்படையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் சேர்த்து முடிவெடுப்போம் என்றார்.