அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஏழு வயது சிறுமியை கடத்திக் கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பாரடைஸ் நகரில் ஏதெனா ஸ்டிரான்ட் என்ற சிறுமி தனது வீட்டின் முன்பிருந்து மாயமானார். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சிறுமியின் வீட்டிற்கு பார்சல் வழங்க வந்த பெட்எக்ஸ் நிறுவன ஒப்பந்த ஓட்டுநரான டானர் ஹார்னர் என்பவர் சிறுமியைக் கடத்தியது தெரியவந்தது. கடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் விசாரணையின் போது, ஹார்னர் தனது வாகனத்தால் சிறுமி மீது மோதியதாகவும், பின்னர் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த போர்ட் வொர்த் நீதிமன்றத்தில், ஹார்னரின் வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி மற்றும் ஆடியோ பதிவுகள் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனால் அவர் சமூகத்திற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. ஹார்னர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆயுள் தண்டனை கோரிய போதிலும், குற்றத்தின் கொடூரத் தன்மையை ஆராய்ந்த நீதிபதிகள், டானர் ஹார்னருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பு சிறுமியின் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் ஓரளவிற்கு ஆறுதலை அளித்துள்ளது.