தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறியைத் தீர்க்க உச்சநீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளது.
தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குச் சேர்த்து 113 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் காலதாமதம் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என அக்கட்சித் தலைமை கருதுகிறது.
இன்று விஜய் ஆளுநரை சந்திக்க இருக்கும் நிலையில், ஆளுநர் மாளிகையிலிருந்து முறையான அழைப்பு வராவிட்டால், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய விஜய் தரப்பு தயாராகிவிட்டது.
தனிப்பெரும் கட்சிக்கு முதலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பை முன்னிறுத்தி இந்த சட்டப் போராட்டம் அமையவுள்ளது. ஆளுநரின் அதிகார வரம்பு மற்றும் சட்டசபையில்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளைச் சுட்டிக்காட்டி தவெக வாதிடவுள்ளது.
ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், அதைத் தங்களுக்குச் சாதகமான அரசியல் எழுச்சியாக மாற்றவும், நீதிமன்றம் மூலம் நீதியைப் பெறவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva