மீண்டும் தேர்தல் நடத்துவதே சரியான வழி.. விஜய் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்.. Zoho ஸ்ரீதர் வேம்பு
Webdunia Tamil May 07, 2026 03:48 PM

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி மற்றும் நிலையற்ற தன்மை குறித்து Zoho நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்து விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான முழுமையான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தற்போது அமைக்கப்படும் எந்தவொரு அரசும் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் இழுபறிகளால் பலவீனமான ஒன்றாகவே இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு, மீண்டும் ஒரு புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இம்முறை ஓட்டுக்கு பணம் கொடுப்பதை முற்றிலுமாக தடுத்து, மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் மக்களின் உண்மையான தீர்ப்பு என்னவென்று தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவார் என்று தான் கருதுவதாகவும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். ஒருவேளை திமுக மற்றும் அதிமுக இதை தடுக்க விரும்பினால், அவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக போராடட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, தனித்து போட்டியிட்டு தமிழகத்தில் ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.