நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, இந்திய கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாதி ரீதியாக விமர்சித்த சமூக வலைதளவாசிக்கு அவர் அளித்துள்ள பதிலடி வைரலாகி வருகிறது.
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜய், தனது முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அரசியல் வட்டாரத்தை அதிர வைத்தார். தேர்தல் முடிவுகளில் 108 இடங்களை வென்றுள்ள தவெக, தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களுக்குச் சற்றே குறைவாக இருந்தாலும், விஜய்யின் இந்த அசுர வளர்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யின் இந்த வெற்றியைப் பாராட்டி கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தளபதி விஜய் மற்றும் தவெக-வினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நான் எப்போதும் அவரின் ரசிகன். ஆனால், இப்போது ஒரு தலைவராக அவரின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவதை ஒரு தொண்டனாக நான் விரும்புகிறேன்,” எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
அஸ்வினின் இந்தப் பதிவிற்குப் கருத்து பதிவிட்ட பயனர் ஒருவர், அஸ்வினின் ஜாதியைக் குறிப்பிட்டு, “திராவிட ஆட்சியைப் பார்த்து அஸ்வின் போன்ற பிராமணர்கள் பயப்படுகிறார்கள்” என விமர்சித்திருந்தார்.
இதற்குத் தனது பாணியில் பதிலளித்த அஸ்வின், “நான் யார் வயிற்றில் பிறக்க வேண்டும் என்பது என் கையில் இல்லை. மற்றவர்களின் போராட்டங்களின் மீது இரக்கம் காட்டுவதே தலைமைப்பண்பு என்று என் பெற்றோரும் ஆசிரியர்களும் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளனர். ஜாதி, இன வேறுபாடுகளைக் கடந்து நாம் பேசும் அந்த நாளைப் பார்க்க நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்,” எனத் தெரிவித்து அந்த விமர்சகரின் வாயை அடைத்துள்ளார். அஸ்வினின் இந்த முதிர்ச்சியான பதில் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.