“118-ஐத் தொடப்போகும் தளபதி” நாளை விசிக அவசர மீட்டிங்…. தவெக ஆட்சியமைக்கப் பச்சைக்கொடி….?
SeithiSolai Tamil May 07, 2026 01:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியை நிரூபிக்கத் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவுக்காக விஜய் காத்திருக்கிறார். இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை (மே 8) தனது உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்தும், அதன் மூலம் ஆட்சியில் பங்கு (Cabinet Berth) பெறுவது குறித்தும் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. விசிக மட்டுமல்லாமல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாளை தங்களது மாநிலச் செயற்குழு கூட்டங்களை நடத்தவுள்ளன. திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக இணைந்து ஒருமித்த முடிவை எடுத்துத் தவெக-விற்கு ஆதரவு அளித்தால், விஜய்யின் முதல்வர் கனவு நனவாகும்.

“ஆட்சியில் அதிகாரப் பகிர்வு” என்கிற விஜய்யின் வாக்குறுதி இந்தக் கட்சிகளை ஈர்த்துள்ள நிலையில், நாளை நடக்கவுள்ள இந்தக் கூட்டங்கள் தமிழக அரசியலின் போக்கை முற்றிலுமாக மாற்றப்போகின்றன. ஒருவேளை இந்த ஆதரவு கிடைத்துவிட்டால், 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய ஆட்சித் தமிழ்நாட்டில் மலருவது உறுதியாகிவிடும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.