ஆட்சி அமைப்பதில் சிக்கல்.. பனையூர் அலுவலகம் வர தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு
Webdunia Tamil May 07, 2026 12:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணைத் தொட முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்து விவாதிக்க சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்படுவது மற்றும் திராவிடக் கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பனையூர் கூட்டத்தில், கட்சியின் பலத்தை எவ்விதம் நிரூபிப்பது, கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் செய்வது மற்றும் பாஜகவின் மறைமுக நெருக்கடிகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, எம்.எல்.ஏ.க்கள் யாரும் அணி மாறாமல் இருப்பதை உறுதி செய்யவும், மக்கள் தீர்ப்பை நிலைநாட்ட வேண்டிய அவசியம் குறித்தும் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த அவசரக் கூட்டம் தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.