நடுவழியில் நின்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்... என்ஜின் பழுதால் பயணிகள் கடும் அவதி!
Dinamaalai May 07, 2026 10:48 AM

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு நோக்கி இன்று (மே 6) காலை 7.40 மணிக்கு புறப்பட்ட பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் அருகே என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. திருவாலங்காடு மற்றும் மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 8.25 மணியளவில் சென்றபோது திடீரென என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் குடிநீர் மற்றும் உணவின்றி ரயிலுக்குள் இருந்த பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த என்ஜின் கோளாறு குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள், உடனடியாக மாற்று என்ஜினை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே ஊழியர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு, காலை 10.57 மணிக்கு ரயில் அரக்கோணம் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு புதிய என்ஜின் முழுமையாகப் பொருத்தப்பட்ட பின்னரே, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பல மணி நேரம் தாமதமாக மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நின்றதால், அந்த வழியாக சென்னை மற்றும் அரக்கோணம் இடையே இயக்கப்பட வேண்டிய 4 புறநகர் மின்சார ரயில்களும் பெரும் தாமதத்தைச் சந்தித்தன. இதனால் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். முறையான பராமரிப்பு இல்லாததே இது போன்ற அடிக்கடி நிகழும் என்ஜின் பழுதுகளுக்குக் காரணம் எனப் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் சென்னை - பெங்களூரு இடையிலான ரயில் போக்குவரத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.