குப்பை கொட்டுவதில் தகராறு- மூதாட்டியை வெட்டிக் கொலை செய்த பக்கத்துவீட்டுக்காரர்
Top Tamil News May 07, 2026 08:48 PM

கோவை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கிறிஸ்தவ போதகரின் தாயார் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் காருண்யா நகர், சப்பாணிமடை சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெசி வின்சென்ட் (72). இவரது ஒரு மகன் ஸ்டேன்லி, அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் கோவை மாநகரப் பகுதியிலும், மகள் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். ஜெசி வின்சென்ட் அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் நோபல் வாட்சன் தங்கதுரை (47). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஜெசி வின்சென்ட் மற்றும் நோபல் வாட்சன் ஆகிய இருவருக்கும் இடையே வீட்டின் அருகே குப்பை கொட்டுவது தொடர்பாக நீண்ட நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நோபல் வாட்சன், தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஜெசி வின்சென்ட்டின் பின்புற தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காருண்யா நகர் போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த பின் தப்பியோடி, அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நோபல் வாட்சன் தங்கதுரையை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நோபல் வாட்சன் மற்றும் உயிரிழந்த ஜெசி வின்சென்ட் ஆகிய இருவருமே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பிழைப்புத் தேடி பல ஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு வந்து குடியேறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.