தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், த.வெ.க மற்றும் ஆளுநரின் போக்கை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், த.வெ.க-வின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
தமிழகப் பொறுப்பு ஆளுநர் அர்லேகரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். ஆனால், போதிய பலம் இல்லாததைக் காரணம் காட்டி, ஆளுநர் அவரைப் பதவியேற்க அழைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசிக நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்த பிறகும், ஆட்சி அமைக்க ஆளுநர் இடையூறு செய்கிறார். ஆனால், இதனைத் தட்டிக்கேட்க த.வெ.க அஞ்சுகிறது.
ஒருவேளை 108 இடங்களைப் பெற்று திமுக இதே நிலையில் இருந்திருந்தால், ஆளுநர் இப்படி இழுத்தடித்திருப்பாரா? சட்டமன்றத்தில் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்பட்ட நிலைதான் இவருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜக-வை எதிர்ப்பதாகும். அதற்குப் பெரிய கொள்கை உறுதியும், துணிச்சலும் வேண்டும். அது விஜய்யிடம் இருக்கிறதா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநரின் செயல்பாட்டிற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆளூர் ஷா நவாஸின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.