தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜனின் மகன் ராஜேந்திரன் (55), கடந்த மே 1-ஆம் தேதி முதல் திடீரென மாயமான நிலையில் இருந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அத்தைக்கொண்டான் சுடுகாட்டு பகுதியிலுள்ள மரத்தில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தது நேற்று கண்டறியப்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவலர்கள், ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உயிரிழப்புக்கான பின்னணி காரணங்கள் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.