பஞ்சாப் மாநில கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), புதன்கிழமை காலமானார். இளம் வயதிலேயே அவரது மறைவு செய்தி கிரிக்கெட் உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1989-ல் சண்டிகரில் பிறந்த அமன்பிரீத் சிங் கில், 2007-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்புத் தொடரில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அந்தத் தொடரில் தற்போதைய நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோருடன் இணைந்து விளையாடினார். குறிப்பாக, வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமன்பிரீத்தின் மறைவு குறித்து முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, அமன்பிரீத் சிங்கின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஆரம்பக் காலங்களில் நாங்கள் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி. விளையாட்டின் மீது மிகுந்த நேசம் கொண்டவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காகச் சிறப்பாக விளையாடிய அமன்பிரீத் சிங், ஐபிஎல் தொடரில் ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணியிலும் இடம் பெற்றிருந்தார். விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பஞ்சாப் மாநில சீனியர் தேர்வுக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, இளம் வீரர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றி வந்தார்.
அவரது மறைவுக்குப் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சண்டிகரில் உள்ள மணிமஜ்ரா சுடுகாட்டில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. 36 வயதே ஆன இளம் வீரரின் மறைவுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.