தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தது குறித்து விமர்சனம் செய்த, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி தனது பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகம்’ மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி குறித்து இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி, கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சில விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாகவும் புகார்கள் எழுந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அலிம் அல் புகாரி வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான அரசியல் நகர்வுகள் எதிர்பார்க்கப்படும் வேளையில், மாநில நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்டிருப்பது தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கமற்ற செயல்களையும், கட்சியின் முடிவுகளுக்கு எதிரான விமர்சனங்களையும் ஒருபோதும் ஏற்க முடியாது என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.