உடற்பயிற்சி கூடங்களில் (Gym) இளைஞர்கள் செய்யும் சாகசங்களும், சில நேரங்களில் அவர்கள் சந்திக்கும் விபரீதங்களும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது உடற்பயிற்சியைப் பதிவு செய்ய முயன்றபோது நேர்ந்த சோகமான விபத்து தற்போதைய ‘ட்ரெண்டிங்’ ஆகியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் மிகக் கனமான இரும்பு பார்பெல்லை (Barbell) தூக்கி ‘டெட்லிஃப்ட்’ பயிற்சியில் ஈடுபடுகிறார். தனது பயிற்சியை அழகாகப் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தனது விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை பார்பெல் விழும் இடத்திற்கு மிக அருகிலேயே முட்டுக்கொடுத்து வைத்திருந்தார்.
பயிற்சியை முடித்த பின், அந்த இளைஞர் பார்பெல்லை கீழே விட்டபோது, எதிர்பாராத விதமாக அது நேராக அந்த போனின் மீது விழுந்தது. பல கிலோ எடை கொண்ட இரும்பு பார்பெல் ஏறியதில், அந்த ஸ்மார்ட்போன் அப்பளம் போல நொருங்கியது. போன் நசுங்கிய சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், பயிற்சியை மறந்துவிட்டு தனது போனைப் பார்த்து உறைந்து நின்ற காட்சி காண்போரைக் கலங்கவும், சிரிக்கவும் வைத்துள்ளது.
இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள், “ஜிம்மில் ரீல்ஸ் எடுப்பதை விடப் பயிற்சியில் கவனம் செலுத்துவதுதான் போனுக்கும் உடலுக்கும் நல்லது” என அறிவுரை கூறி வருகின்றனர். “பார்பெல்லுக்கும் போனுக்கும் நடந்த இந்தப் போரில் பார்பெல் தான் வின்னர்” எனப் பலரும் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.