தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும், ஆட்சி அமைக்க ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவது அரசியல் விவாதங்களைச் சூடாக்கியுள்ளது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதை கண்டிக்க அஞ்சுகிறது தவெக" என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், இதே 108 இடங்களை திமுக பெற்றிருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்திருந்தால், சட்டமன்றத்தில் ஆர்.என். ரவிக்கு நேர்ந்தது போன்ற கடும் எதிர்ப்புகளை அவர் சந்திக்க நேரிட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுநரை எதிர்ப்பது என்பது நேரடியாக பாஜகவை எதிர்ப்பதாகும் என்று குறிப்பிட்டுள்ள ஆளூர் ஷா நவாஸ், அத்தகைய எதிர்ப்பிற்கு தேவையான கொள்கை உறுதியும், துணிவும் விஜயிடம் உள்ளதா? என்ற வினாவையும் முன்வைத்துள்ளார். தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயக விதியை ஆளுநர் மதிக்காத சூழலில், தவெக-வின் மௌனம் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைச் சந்தேிக்க வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையை நோக்கி துணிச்சலாக கேள்வி எழுப்ப வேண்டிய தருணத்தில் விஜய் தயக்கம் காட்டுவது, அவரது எதிர்கால அரசியல் பயணத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதம் தற்போது மேலெழுந்துள்ளது.
Edited by Siva