ஈரான் சிறையில் நேர்ந்த கொடுமைகள்; `அமைதி' நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதி ஜாமீனில் விடுதலை!
Vikatan May 11, 2026 10:48 PM

ஈரானின் எவின் (Evin) சிறைச்சாலை உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்று. அந்த இருண்ட சுவர்களுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்றால், அது நர்கீஸ் முகமதி என்ற மனித உரிமைப் போராளியின் குரல்தான்.

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர், ஈரானிய பெண்களின் உரிமைகளுக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.

நர்கீஸ் முகமதி | Narges Mohammadi

வெள்ளைச் சித்திரவதை (White Torture)

உடல்ரீதியான அடிகளை விட மனரீதியான சித்திரவதை கொடூரமானது. இதைத்தான் நர்கீஸ் `வெள்ளைச் சித்திரவதை’ என்கிறார். ஒரு கைதியைப் பல மாதங்கள் எவ்வித தொடர்பும், வெளிச்சமும் இன்றி ஒரு சிறிய தனிமைச் சிறையில் அடைப்பது, அவர்களை மனதளவில் முடக்கும் ஒரு கொடூர உத்தி.

நர்கீஸ் இந்தத் தனிமைச் சிறையில் பல நாள்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதை எதிர்த்தது மட்டுமின்றி, தன்னுடன் சிறையில் இருந்த மற்ற பெண்களிடம் பேசி, அவர்கள் அனுபவித்த தனிமைச் சிறைக் கொடுமைகளை ஆவணப்படுத்தி `White Torture' என்ற பெயரில் ஒரு புத்தகமாகவே வெளியிட்டார்.

சிறைக்குள்ளிருந்து பறந்த செய்திகள்

கொடூரமான சிறைக் காவல்களையும் மீறி, நர்கீஸின் கட்டுரைகளும், செய்திகளும் எப்படி வெளியே வருகின்றன என்பது பலருக்கும் ஆச்சரியம்! சிறையில் நடக்கும் கொடுமைகளை அவர் சிறு துண்டுச் சீட்டுகளில் எழுதி, சிறையிலிருந்து வெளியே செல்லும் மற்றவர்கள் மூலமாகக் கடத்துகிறார்.

சில நேரங்களில் சிறையில் இருந்து அனுமதிக்கப்படும் குறுகிய தொலைபேசி அழைப்புகள் மூலமாக தனது ஆதரவாளர்களிடம் செய்திகளைப் பேசிப் பதிவு செய்கிறார். இப்படிச் சிறையில் இருந்து துண்டு துண்டாகக் கடத்தப்பட்ட குறிப்புகள்தான், சமீபத்தில் `A Woman Never Stops Fighting’ (ஒரு பெண் தனது போராட்டத்தை ஒருபோதும் நிறுத்துவதில்லை) என்ற அவரது நினைவுக்குறிப்பாக (Memoir) உருவெடுத்தது.

நர்கீஸ் முகமதி | Narges Mohammadi

குடும்பத்தின் தியாகம்

இந்த வீராங்கனையின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சோகம் உள்ளது. இவரது கணவர் தாகி ரஹ்மானியும் ஒரு பத்திரிகையாளர், செயற்பாட்டாளர். ஈரானிய அரசின் தொடர் அச்சுறுத்தலால் அவர் பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இவர்களுக்கு அலி, கியானா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

பல ஆண்டுகளாக நர்கீஸ் தனது கணவரையோ, குழந்தைகளையோ நேரில் பார்க்கவே இல்லை. 2023-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது கூட, அதை நேரில் சென்று வாங்க முடியாமல் சிறையில்தான் இருந்தார். அவரது சார்பாக அந்தப் பரிசை அவரது இரட்டைக் குழந்தைகள்தான் நார்வே நாட்டுக்குச் சென்று கண்ணீருடன் பெற்றுக் கொண்டனர்.

2022-ல் மாசா அமினி என்ற இளம் பெண் ஈரானிய அறநெறி போலீசாரால் (Morality Police) அடித்துக் கொல்லப்பட்ட பிறகு, `பெண், வாழ்வு, சுதந்திரம்’ என்ற முழக்கத்தோடு ஈரானில் மாபெரும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தின் ஆன்மாவாக நர்கீஸ் முகமதி சிறைக்குள்ளிருந்தே செயல்பட்டார்.

சிறையில் சக பெண் கைதிகளுடன் இணைந்து அவர் நடத்திய உள்ளிருப்புப் போராட்டங்களும், பாடிய எழுச்சிப் பாடல்களும் சிறைச்சாலையின் இரும்புக்கதவுகளைத் தாண்டி உலகத்தின் காதுகளில் ஒலித்தன.

நர்கீஸ் முகமதி | Narges Mohammadi Monday Motivation: ஒரு சவால்; ஒரு பதவி; பெரும் பிரச்னை; விடாப்பிடியாக வென்ற ரத்தன் டாடா

நர்கீஸ் முகமதியின் உடல்நிலை சிறையில் மிகவும் மோசமடைந்ததை அடுத்து, ஈரானிய அதிகாரிகள் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக அவரது சிறைத்தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

சிறையில் இருந்தபோது மே 1-ஆம் தேதி அவர் இரண்டு முறை மயங்கி விழுந்துள்ளார். மாரடைப்புக்கான அறிகுறிகள், நுரையீரலில் ரத்தம் உறைதல் எனப் பல கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 140 நாள்களாக அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படாமல் சிறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மருத்துவச் சிகிச்சைக்காக அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருந்தாலும், இது போதுமானதல்ல என்று `நர்கீஸ் முகமதி அறக்கட்டளை' தெரிவித்துள்ளது. அவருக்கு நிரந்தரமான மற்றும் சிறப்பான மருத்துவக் கவனிப்புத் தேவை என்பதால், மீதமுள்ள 18 ஆண்டு கால சிறைத்தண்டனைக்காக அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பக் கூடாது என்றும், அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து நிபந்தனையின்றி அவரை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினரும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தனக்குக் கடுமையான நோய் இருந்தும், முறையான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையிலும், "என்னை எத்தனை முறை சிறையில் அடைத்தாலும், என் குரலை உங்களால் முடக்க முடியாது" எனத் தொடர்ந்து போராடி வருகிறார் நர்கீஸ் முகமதி. அவரது துணிச்சல், உலகில் ஒடுக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்குமான நம்பிக்கை வெளிச்சம்.

Monday Motivation: உங்களை ஓஹோவென்று உயர்த்தும் ஒரு திறமை! - Anandham Selvakumar
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.