சாமான்யர்களுக்கு இடமில்லையா...? தமிழக எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து ரூ.48 கோடி...அதிரவைக்கும் ADR அறிக்கை!
Seithipunal Tamil May 12, 2026 12:48 AM

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இருநூற்று இருபத்துநான்கு வேட்பாளர்களின் சொத்து விவர ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, அதில் நூற்று தொண்ணூற்று இரண்டு பேர் கோடீஸ்வர உறுப்பினர்களாக இருப்பது ஆய்வறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்தது

இந்நிலையில், இரண்டாயிரத்து இருபத்தாறு ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் தமிழ்நாடு கண்காணிப்பாளர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், தற்போது தமிழ்நாட்டில் நூற்று தொண்ணூற்று மூன்று கோடீஸ்வர சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.அருண்குமாரின் சொத்து ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெளிவாக பதிவாகாத காரணத்தால், அவரது விவரங்கள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற நூற்று தொண்ணூற்று மூன்று உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு நாற்பத்தெட்டு ஆயிரத்து முப்பத்தைந்து கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.அதில் அதிக சொத்து மதிப்புடன் லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் லீமாரோஸ் இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ஐம்பத்தெட்டு ஆயிரத்து அறுநூற்று முப்பத்தேழு கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேபோல், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச.ஜோசப் விஜயின் சொத்து மதிப்பு அறுநூற்று நாற்பத்தெட்டு கோடி ரூபாயாகவும், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் அதவ் அர்ஜுனாவின் சொத்து மதிப்பு ஐந்நூற்று முப்பத்திநான்கு கோடி ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த சொத்து மதிப்பைக் கொண்டவர்களாக ஆம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் தாஹிரா நான்கு லட்சம் ரூபாய்க்கும் குறைவான சொத்துகளையும், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற கே.சிவகுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான சொத்துகளையும் கொண்டுள்ளனர்.

மேலும், திருத்துறைப்பூண்டி தனித்தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.மாரிமுத்து பதின்மூன்று லட்சம் ரூபாய்க்கும் குறைவான சொத்து மதிப்பை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நூற்று ஐம்பத்திரண்டு கோடியே எண்பத்தொன்பது லட்சம் ரூபாயுடன் முதலிடத்திலும், தமிழக வெற்றிக் கழகம் இருபத்தேழு கோடியே ஒன்பது லட்சம் ரூபாயுடனும், திராவிட முன்னேற்றக் கழகம் பதினான்கு கோடியே முப்பத்திநான்கு லட்சம் ரூபாயுடனும் இடம்பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.