மே.13 அன்று முதல்வராக பதவியேற்கிறார் ரங்கசாமி
Top Tamil News May 12, 2026 12:48 AM

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோடு இரு பாஜக அமைச்சர்களும் நாளை மறுநாளான மே 13ல் பதவியேற்கிறார். அமைச்சர் பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் தந்துள்ளார். அப்பட்டியலை மத்திய உள்துறைக்கு அனுப்புகிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முதல்வர்  ரங்கசாமி தலைமையில் அமையும் ஆட்சியில் கடந்த முறையை போலவே பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார். நேரடியாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ரங்கசாமி சம்மதித்துள்ளார். நாளை மறுநாள் 13ம் தேதி புதன்கிழமை காலை ரங்கசாமி முதல்வராக  பதவி ஏற்க உள்ளார். பாஜக தரப்பில் அக்கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயம், காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கான விழா ஆளுநர் மாளிகை வளாகத்தில்  நடைபெற உள்ளது. ஆளுநர்  கைலாஷ்நாதன், முதல்வர், அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். என்ஆர்காங்கிரஸ் தரப்பில் அமைச்சர்கள் எப்போது பதவியேற்பார்கள் என்று விசாரித்தபோது, "முதல்வர் முதலில் பதவி ஏற்பார். என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.  வேறொரு நாளில் பதவியேற்பார்கள். என்ஆர்.காங்கிரசில் மல்லாடிகிருஷ்ணாராவ், ராஜவேலு, நாராயணசாமி ஆகியோருக்கு அமைச்சர் பதவி உறுதியாகியுள்ளது." என்றனர்.


இந்நிலையில் இன்று மாலை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது அமைச்சர்கள் பட்டியலை அளித்தார். அதில் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ராஜவேலு, நாராயணசாமி, ராஜசேகரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அப்பட்டியலை மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பி வைப்பார். முதல்வருடன் அமைச்சர்கள் பதவியேற்பார்களா என்ற விவரம் வெளியாகவில்லை.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.