பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்? முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி..
TV9 Tamil News May 12, 2026 01:48 AM

சென்னை, மே 11, 2026: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றுக்கொண்ட பின்னர் தமிழக மக்களிடம் உரையாற்றியபோது, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் – ஒழுங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நிர்வாக பொறுப்புகளை ஏற்ற முதல்வர் விஜய்:

இதனைத் தொடர்ந்து, மேடையிலேயே மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கோப்பில், 500 யூனிடிற்குள் மின்சாரம் பயன்படுத்தக்கூடிய வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், பெண்கள் பாதுகாப்புக்காக “சிங்கப்பெண் படை” அமைக்கப்படும் உள்ளிட்ட மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்.. பதிலுக்கு முதல்வர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று கையெழுத்திட்டு தனது நிர்வாகப் பணிகளை தொடங்கினார். மேலும், பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இந்த சூழலில், அரசியல் நாகரீகம் கருதி மரியாதை நிமித்தமான சந்திப்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் ஒருபுறம் சந்தித்து வருகிறார்.

200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்?

இந்த நிலையில், தமிழகத்தில் 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் முதலமைச்சர் விஜய் உத்தரவு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, போதைப்பொருள் ஒழிப்பில் கண்டிப்பாக இருக்கப் போவதாகவும், தமிழக இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் அதற்கு அடிமையாகாமல் இருக்கும் வகையில் போதைப்பொருள் இல்லா தமிழகமாக மாற்றப்படும் எனவும் நேற்றைய உரையில் பேசியிருந்தார். இதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கோயில், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் மதுபானக் கடைகளை ஆய்வு செய்து மூட உத்தரவிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.