பட்ஜெட்டிலும் 'மிச்சம்'... தொப்பையிலும் 'மிச்சம்'...! - எண்ணெயைச் சேமிக்க இதோ மேஜிக் டிப்ஸ்...!
Seithipunal Tamil May 12, 2026 01:48 AM

இந்தியர்களின் அன்றாட சமையலில் எண்ணெய் தவிர்க்க முடியாத முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் எண்ணெய் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்க்கையையும் கூடுதல் கலோரிகளையும் உருவாக்கி பல்வேறு உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு இந்திய குடும்பமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைந்தது பத்து விழுக்காடு வரை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் உருவாகும் பொருளாதார பாதிப்புகளையும் அந்நியச் செலாவணி செலவையும் குறைக்க இது உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவையைக் குறைக்காமல் மிகக் குறைந்த எண்ணெயில் சமைப்பதற்கான சில எளிய வழிமுறைகள் தற்போது மக்களிடையே அதிக கவனம் பெற்று வருகின்றன.தரமான சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவது எண்ணெய் பயன்பாட்டை இயல்பாகவே குறைக்கும்.

சாதாரண பாத்திரங்களை விட ஒட்டாத தன்மை கொண்ட பாத்திரங்கள், வார்ப்பிரும்பு பாத்திரங்கள் மற்றும் பீங்கான் பூச்சு செய்யப்பட்ட சமையல் உபகரணங்கள் குறைந்த எண்ணெயிலேயே சிறந்த சமைப்பை வழங்குகின்றன.பலர் எண்ணெய் பாட்டிலிலிருந்து நேரடியாக பாத்திரத்தில் ஊற்றும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

இதற்குப் பதிலாக அளவுக்கரண்டியை பயன்படுத்தினால் தேவையான அளவு மட்டுமே சேர்க்கப்படும். இதன் மூலம் உணவு லேசாகவும் உடலுக்கு ஏற்றதாகவும் மாறும்.அதிக எண்ணெயில் பொரித்த உணவுகளுக்குப் பதிலாக நெருப்பில் சுட்டல், மெதுவாக வறுத்தல், ஆவியில் வேகவைத்தல் போன்ற நவீன சமையல் முறைகளைப் பயன்படுத்தலாம்.

இம்முறைகள் சுவையை குறைக்காமல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மையுடையவை.வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொருட்களை வதக்கும்போது அதிக எண்ணெய் ஊற்றுவதற்குப் பதிலாக, சில துளி எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீர் அல்லது தயிர் தெளித்து வதக்கலாம். இது உணவுப் பொருட்களை மென்மையுடனும் சுவைமிக்க தன்மையுடனும் சமைக்க உதவும்.

உணவின் மணமும் ருசியும் அதிகரிக்க எண்ணெய் மட்டுமே காரணமல்ல. பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கடுகு, எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை, புதினா மற்றும் நன்கு வறுத்த மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டால் குறைந்த எண்ணெயிலும் உணவு மணமுடன் சுவையாக அமையும்.

தோசை, பரோட்டா போன்ற உணவுகளை சுடும்போது கரண்டியால் அதிக எண்ணெய் ஊற்றுவதற்குப் பதிலாக எண்ணெய் தெளிப்பான் அல்லது மென்மையான தடவுக் கருவிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் எண்ணெய் சமமாகப் பரவுவதோடு, தேவையற்ற அதிகப்படியான பயன்பாட்டை பெருமளவில் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.